யாழ். சர்வதேச விமானநிலையம் குறித்து விசாரணை – அமைச்சரவையில் தீர்மானம்

Report Print Murali Murali in சிறப்பு

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப். மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த பறப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.