ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல்! சாட்சியம் வழங்க தயாராகும் மைத்திரி

Report Print Murali Murali in சிறப்பு

ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல் குறித்து இரகசிய பொலிஸில் முன்னிலையாகி சாட்சியம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை அல்லது நாளை மறுதினம் இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கக் கூடும் என பிரதி சொலிசிட்டர் நாயகம் தீலிப பீரிஸ் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது இரகசிய பொலிஸார் சார்பில் நீதிமன்றில் சாட்சி வழங்கிய அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்.

“முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்ள இதுவரை திகதி ஒன்று ஒதுக்கப்படவில்லை எனவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் கூறினார்.

அதேபோல் அசாத் சாலி மற்றும் எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோரிடமும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதின் மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த நீதவான் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.