நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிகவும் கண்காணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சீனாவில் நிமோனியா வைரஸ் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஆசிய நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் நிமோனியா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக கண்டரியப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, சீனா சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தாக்கத்திற்கான சரியான காரணத்தை சீன அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை வுஹான் மாகாணத்தில் நிமோனியா தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் வரை கண்டரியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏனைய நாடுகளை ஏச்சரித்துள்ளது.

அதில் 11 போர் கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வுஹான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிமோனியா வைரஸ் தாக்கமானது ஆசியா முழுவதும் விழிப்பூட்டல்களை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக சீனா மற்றும் ஹாங்காங், சிங்கப்பூர், பாங்காக், மலேசியா, மக்காவ், தைவான், தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான நிலையங்கள், நாட்டின் எல்லைகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

குறித்த நோய்க்கிருமி மற்றும் நோய்த்தொற்றுக்கான காரணம் பற்றி இன்னமும் ஆராயப்பட்டுவரும் நிலையில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள், பறவை காய்ச்சல் வைரஸ்கள், அடினோவைரஸ், கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ்) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி உள்ளிட்ட சுவாச நோய்க்கிருமிகளை ஏற்படுபடுத்தும் நோய்க்கிருமி நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை வந்த அறிக்கைகள் நிமோனியா ஒரு அரிய வைரஸ் அல்லது முன்னர் அறியப்படாத ஒரு நோய்க்கிருமியால் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்பே நோய்தொற்று அறிகுறிகள் வெளிபடுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் தாக்கம் காரணமாக முந்தைய காலங்களில் 32 நாடுகளில் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.