கைது நடவடிக்கைகளின் போது மிகவும் கவனமாக செயற்படுங்கள்! ஜனாதிபதி பணிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்த்திற்கும் பெரிதும் பாதிப்பு செலுத்தக் கூடியது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாகவும் சட்ட திட்டங்களை முழுமையாக பேணியும் நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும் என்றும் அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணையின்றி இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்கள் தொடர்பில் மேற்படி கடமையினை நிறைவேற்றும் போது பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

மேலும் இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து இலங்கைப் பிரஜைகள் தொடர்பிலும் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஏற்புடையதாகும் என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளி நோக்கங்களுக்காக செயற்படக் கூடாது என்றும் எவ்வித தேவையற்ற அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.