விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை மறுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என தெரிவித்து, மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

மலாக்கா காடேக் டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், தொழில்நுட்பாளர் எஸ்.அறிவேந்தன், கடிதப்பட்டுவாடா பணியாளர் எஸ்.தீரன் மற்றும் ஆசிரியர் ஆர்.சுந்தரம் ஆகியோர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. சாமிநாதன், தீரன் மற்றும் சுந்தரம் ஆகியோர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 130JB (1) (a) விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

முகநூல் மூலமாக அறிவேந்தன் மற்றும் தீரன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஒக்டோர் 5 மற்றும் 8ம் திகதிகளில் புக்கிட் அமான் பயங்கரவாத துடைதொழிப்பு பிரிவின் அலுவலகத்தில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

அத்துடன், கடந்த 2018ம் ஆண்டு மலாக்கா ஆயர் குரோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக சாமிநாதன் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

2018ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers