சார்ஸை மிஞ்சுகிறதா கொரோனா ? - ஒரு சிறப்புப் பார்வை

Report Print Gokulan Gokulan in சிறப்பு

சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையிலிருந்து உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (2019-nCoV ) உலகம் முழுவதும் பரவிவருவதுடன் உலக நாடுகளில் அவசர நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இதுவரை 106 பேர் உயிரிழந்தும் 4515 பேர் பாதிப்படைந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோன்று சார்ஸ் வைரஸ் (Severe acute respiratory syndrome) 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2003 ஜுலை வரையான காலப்பகுதியில் ஹொங்கொங்கில் உருவாகி உலகம் ழுமுவதும் 37 நாடுகளுக்கு பரவியதன் காரணமாக 8,422 பேர் பாதிக்கப்பட்டதுடன் 916 பேர் உயிரிழந்தனர்.

தற்போது புதிதாக தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் ஆனது சார்ஸ் வைரஸின் பாதிப்புகளை பெரும்பாலும் ஒத்ததாக காணப்படுகின்றது. நூறு வீதம் ஒத்த இயல்புகள் காணப்பாடாத போதும் இதன் ஒப்பீடு புதிய நோய் பற்றிய ஒரு புரிதலை எமக்கு தரலாம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 25 ஆம் திகதிக்குள் குறைந்தது 49 பேரை பலியெடுத்த்து.

இந்த எண்ணிக்கை தற்போது 100 தாண்டியுள்ளது. இருப்பினும் மனித உடலில் இருந்து வைரஸை அகற்றுவதற்கான சரியான ஒரு சிகிச்சை முறையை வைத்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் தினசரி நூற்றுக்காணக்கானவர்களுக்கு நோய் தொற்று இருப்பதாக அறியப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தொடங்குகிறது.

அறிகுறிகள் பின்னர் விரைவாக தீவிரமடையக்கூடும், இதன் விளைவாக கடுமையான சுவாச நோய்க்கான அறிகுறிகள் உருவாகுகின்றது. இந்த நிலை ARDS என குறிப்பிடப்படும்.

இந்த நிலைமை தொடரும் போத நோயாளியின் நிலை ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை எனவே தொற்றுக்குள்ளனவர்கள் அன்டிபயோடிக்குகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்டிபயோடிக்ஸ் வைரஸ்களுக்கு எதிராக செயற்படாது, பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே செயற்படும்.

நோய் பரவும் விகிதம்!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சார்ஸ் வைரஸ் பரவல் முதல் இரண்டு மாதங்களுக்கு வேகமாக இருந்தது, பின்னர் ஒரு மாதத்திற்கு மெதுவாக கட்டுப்பாட்டு நிலைக்கு வந்தது.

கொரோனா வைரஸ் தொற்றானது , ஒப்பீட்டளவில், ஆரம்ப கட்டம் விரைவான வளர்ச்சியை காட்டுகின்றது. இதில் கவனிக்கக்கூடிய மற்றொரு விடயம் என்னவென்றால், முதல் 2,000 நோய்த்தொற்றுகளின் போது கொரோனா வைரஸ் சார்ஸ் ஐ விட இரு மடங்கு வேகமாக பரவுகிறது.

கொரோனா வைரஸ் ஐந்து நாட்களில் 500 முதல் 2,000 பேர் வரை பரவியது. அதே நேரத்தில் சார்ஸ் இந்த தொகையை அடைய ஒரு வாரம் எடுத்து கொண்டது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவரில் நோய் அறிகுறிகள் வெளிவர எடுத்துகொள்ளும் காலம் சார்ஸை விட அதிகமாக உள்ளது. இத நோய் பரவுவதற்கு முக்கிய காரணியாக இனம் காணப்பட்டுள்ளது.

இறப்பு விகிதம்!

இது வரை உள்ள நிலைமைகளின் படி , கொரோனா வைரஸ் சார்ஸை போன்ற ஆபத்தான கட்டத்தை இன்னும் நெருங்கவில்லை, இதற்கு காரணம் இறப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது தான்.

சார்ஸ் வைரஸ் தாக்கத்திற்குள்ளான 10 நோயாளிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். இது சார்ஸ் உடன் ஒப்பிடும் போது அதன் இறப்பு விகிதத்தில் பாதியாக காணப்படுகின்றது.

நோயாளியின் மீட்பு விகிதம்!

தரவுகளின்படி, சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா வைரஸை விட மிக அதிகம்.

இருப்பினும், கொரோனா வைரஸ் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற எச்சரிக்கை இந்த நிலைமையில் மாற்றத்தை கொண்டு வரலாம்.

இதுவரை, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சில எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் இதற்கு பயன்படுத்தபடுகின்றது.

நோயாளி குணமடைவதற்கான வாய்ப்பு நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தே அமையும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் வைரஸ் பரவல் விகிதம்!

இது வரை வெளியான தகவல்களின் படி சீன நாட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் நோயாளிகள் 67 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இது நோய்த் தொற்றின் மொத்த எண்ணிக்கையின் 1.4 சதவீகிதமாகும்.

எனினும் சார்ஸ் தெற்று ஏற்பட்ட போது அது சீனாவுக்கு வெளியே 30 சதவீகிதத்திற்கும் அதிகமானவர்களை தாக்கியிருந்தது. எனவே புதிய வைரஸ் சார்ஸ் போன்று உலகளவில் பரவவில்லை.

ஒப்பீட்டளவில் புதிய கொரோனா வைரஸ் சார்ஸை போல தீவிரமாக செயற்படவில்லை எனினும் இந்த நிலைமை மாற்றமடையலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.