வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கை விடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை தெளிவுபடுத்துகின்றேன்.

விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் உரையாடியிருந்தார்.மருந்தகங்களில் என்-95 என்கிற முகக் கவசங்கம் தட்டுப்பாடாகியுள்ளது.

இதன்படி இந்திய தூதரகத்துடன் கலந்துரையாடி இந்தியாவிலிருந்து இந்த என்-95 ரக முகக்கவசங்களைக் கொண்டுவருவதற்கு பேசியுள்ளார்.

விசேடமாக இந்தியத் தூதரகம் இலவசமாக இந்த முகக் கவசங்களை இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்துடன் நானும் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டேன்.

அரசாங்கம் எழுத்துமூலமாக இந்திய தூதரகத்திடம் கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் முகக் கவசங்கள் தேவைப்படுகின்ற அளவினை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்பதை என்னிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்கவிடனும் தெரிவித்தேன்.

அதற்கான கோரிக்கை கடிதத்தை இந்திய தூதரகத்திடம் கையளிக்கும்படி கோரினேன். இந்த நெருக்கடி விடயத்தில் நாங்கள் கட்சி பேதம் இன்றி அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்” என்றார்.

Latest Offers