சீனாவில் இருந்து மாணவர்களை அழைத்துவர முடிந்தமை இராஜதந்திர முயற்சியின் பெறுபேறு!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக வுஹான் நகரிலிருந்து மாணவர்களை விரைவாக அழைத்துவர முடிந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் வுஹான் நகரில் இருந்து 33 இலங்கை மாணவர்களை விரைவாக அழைத்துவர அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. இது நாடு ஒன்றின் இராஜதந்திர தலையீட்டு அடிப்படையில் இலங்கைக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும்.

வுஹான் நகரில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதகரம் இதற்காக செயற்பாட்டு ரீதியில் பங்களிப்புச் செய்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பெறுபேறுகள் கிடைத்தமை, இலங்கைக்கும் - சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நெருக்கமான நம்பிக்கையான வெளிநாட்டுக் கொள்கையின் பிரதிபலனாகும்.

சீனாவிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுவதற்கு சீன அரசாங்கம் அனுமதி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் வென் ஷுவான் நேற்றிரவு அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

மாணவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததை சீனத் தூதுவர், பிரதமரிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.