ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Ajith Ajith in சிறப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதித்துறை இராஜாங்க அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான உடன்பாடு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி அளவில் எட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையை தீர்க்க பெருந்தோட்ட நிறுவனங்கள் மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளன. இதில் உற்பத்தி அடிப்படையிலான சம்பளத்திட்டமே வெற்றியளிக்கும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 1000 ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளதுடன் பெருந்தோட்டத்துறை நட்டமடையாமல் இருப்பதற்கான உறுதியையும் அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றனர் என்று பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மார்ச் முதலாம் திகதியில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்திருந்தார்

எவ்வாறாயினும், இது பெருந்தோட்டத்துறையில் பாரிய தாக்கங்களை கொண்டு வரும் என்று நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.

எனினும் இந்த 1000 ரூபாவை வழங்க அரசாங்கம் தற்காலிக உதவிகளை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கும் என்று இராஜாங்க அமைச்சர் பத்திரன தெரிவித்துள்ளார்.