உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளில் திருப்தி இல்லை! கொழும்பு பேராயர் அதிருப்தி

Report Print Rakesh in சிறப்பு

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் திருப்திப்படும் வகையில் இல்லை."

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார். இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னரான ஒவ்வொரு விடயங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய கொழும்பு பேராயர், அந்த உரிமையைத் தலைவர்கள் நிலை நாட்டுவார்கள் என எதிர்பார்த்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் பதிவாகியுள்ள விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று தமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைந்தாலும், பாதுகாப்புத் தரப்பினர் இது தொடர்பில் உரிய முறையில் செயற்படுகின்றனரா என்பதை அறியமுடியவில்லை எனக் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.