ஐநா தீர்மானத்திலிருந்து உரிய முறையில் வெளியேறாவிடின், இலங்கை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும்!

Report Print Murali Murali in சிறப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 19ஆம் திகதி விசேட அறிக்கையொன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடந்த 19ஆம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் (பிப்ரவரி 20) தெரிவித்திருந்தார்.

30/1 தீர்மானம்

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கையின் இணை அனுசரணையில் ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையே 30/1 தீர்மானமாகும்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தீர்மானம் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்தக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சர்வதேச நீதிபதிகளின் பங்குப்பற்றுதலுடன் விசாரணைகளை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டது.

  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல்.
  • நட்டஈடு வழங்கும் அலுவலகத்தை ஸ்தாபித்தல்.
  • விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு தேசிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுதல்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல்.
  • விசேட ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்குதல்.
  • நீதிமன்றம் மற்றும் சட்ட நிறுவனங்களை முன்னெடுத்து செல்வதற்கான நபர்களை நியமித்தல்.
  • கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கு சர்வதேச தரப்பின் நிதியுதவிகள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல்.

இவ்வாறு ஐநா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட சில விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், முக்கிய சில தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

43ஆவது மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கை பங்குப்பற்ற தீர்மானம்

எதிர்வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையின் பிரசன்னம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த கூட்டத் தொடரில் பங்குப்பற்றுவது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இராஜாதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2015 ஆக்டோபர் மாதம் இலக்கம் 30/1 மற்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலக்கம் 34/1 ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை முன்னேற்றம் குறித்து 2019 மார்ச் மாதம் இலக்கம் 40/1 தீர்மானத்திற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில், இந்த அனைத்து தீர்மானங்களிலும் இருந்து வெளியேற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகித்த நிலையில், இலங்கைக்கு எதிராக குறித்த தீர்மானத்தை கொண்டு வர முன்னின்று செயற்பட்ட அமெரிக்கா தற்போது மனித உரிமை பேரவையிலிருந்து விலகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா மனித உரிமை பேரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அரசியல் பாகுபாடுகள் உள்ளதாக தெரிவித்தே அமெரிக்கா அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.

30/1 தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா தற்போது மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதில்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தினாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.

இலங்கை இராணுவத்திற்கும், நாட்டின் தலைவர்களுக்கும் தண்டனை வழங்க சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், தமது அரசாங்கத்தினால் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கப்பட்ட குறித்த தீர்மானத்தினாலேயே அனைவரும் காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற விதத்திலும், 30/1 தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர் என்ற விதத்திலுமே மங்கள சமரவீர இந்த தெளிவூட்டலை விடுத்துள்ளார்.

ஐநாவின் குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவு தெரிவித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட தருணத்தில், குறித்த தீர்மானத்தின் ஊடாகவே மின்சார கதிரைக்கு செல்வதை தமது அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கான அவசியம் கிடையாது என்பதை தாம் ஜெனிவாவிற்கு எடுத்துரைத்ததாக கூறிய மங்கள சமரவீர, உள்நாட்டிற்குள்ளேயே தாம் விசாரணைகளை நடத்துவதாக உறுதியளித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

யுத்தக் குற்றம் தொடர்பிலான பிரச்சினைகளிலிருந்து சர்வதேசத்தை சற்று தள்ளி வைக்க முடிந்ததாகவும், அதனூடாகவே தாம் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை காப்பாற்றியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐநாவின் தீர்மானத்திலிருந்து விலகுவதான அறிவிப்பு தொடர்பில் சட்டத்தரணியின் பார்வை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்கான நடைமுறைகளை பின்பற்றியே இலங்கை அதிலிருந்து வெளியேற வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி பேராசிரியர் பிரதீபா மஹானாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய பிரதான நாடான அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் தற்போது அங்கம் பெறாமையினால் உரிய நடைமுறைகளை பின்பற்றி வெளியேற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இல்லாத போதிலும், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினால் உரிய நடைமுறைகளின் பிரகாரமே வெளியேற வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு உரிய நடைமுறைகளை பின்பற்றி வெளியேறாத பட்சத்தில், பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதீபா மஹானாமஹேவா எச்சரிக்கை விடுக்கின்றார்.

இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்கான சரியான காரணங்களை சுட்டிக்காட்டியே அதிலிருந்து விலக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் ஊடாக, மனித உரிமை பேரவை பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

யுத்தக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை தண்டனை வழங்கவில்லை என்பதை வலியுறுத்தி வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும் என்ற பாரதூரமான சரத்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கலப்பு நீதிமன்றத்திற்கு கொமன்வெல்த் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தரணிகளே ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது பாரதூரமான விடயம் என பிரதீபா மஹானாமஹேவா கூறினார்.

ஐநா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கையின் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெற்று, இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறுவதே சிறந்ததொரு நடைமுறை எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையுடன் நட்புறவாக செயற்படும் பல நாடுகள் பாதுகாப்பு பேரவையில் இருப்பதனால், அமெரிக்காவிற்கு இலங்கைக்கு எதிராக ஐநாவில் தடையை விதிக்க முடியாதமையினாலேயே, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடையை விதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், உரிய நடைமுறைகளை பின்பற்றி, இலங்கை குறித்த தீர்மானத்திலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா குறிப்பிடுகின்றார்.


You may like this video...

- BBC - Tamil

Latest Offers

loading...