கொரோனா வைரஸ் தீவிரம்! தென்கொரியாவில் இருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

தென் கொரியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் உடனடியாக தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

தென்கொரியாவில் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தென் கொரியா அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் 229 புதிய நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தென் கொரியாவில் இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.