விபத்தின்போது தான் வாகனத்தை செலுத்தவில்லை! நீதிமன்றில் சம்பிக்க தெரிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு

2016ம் ஆண்டு ஒருவரை மோதி காயப்படுத்திய வாகன விபத்தின்போது தாம் அந்த வாகனத்தை செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் வாகனத்தை பாட்டலி சம்பிக்க ரணவக்கவே செலுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும் அது மறுக்கப்பட்டு பாட்டலியின் சாரதியே வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் திகதி இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின்போது சாரதியான திலும் துசித்த குமார ஒரு மணித்தியாலமாக நீண்ட இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.

இதன் அடிப்படையில் அவர் விபத்து இடம்பெற்றவேளையில் வாகனத்தை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீபா பீரிஸ் இன்று தெரிவித்தார்.

பொரல்ல காவல்துறையினர் ஊடாகவே திலும் துசித்தவே வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படடது. இதன்போது பொரல்ல காவல்துறையால் விரைவில் விடுவிக்கப்படும் உத்தரவாதம் துசித்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிப்பட்ட விஜயமாக இரண்டு வாரங்களுக்கு வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவுஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்ற கோரிக்கை இன்று முன்வைக்கப்பட்டது.

எனினும் இதற்கான முடிவு எதிர்வரும் 4ம் திகதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.