நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த கட்டத்தை நோக்கி அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகரிகள் சம்மேளனம் அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இதன்படி மார்ச் 25ம் திகதியான இன்று முதல் ஏப்ரல் 7ம் திகதிவரையான காலப்பகுதியில் சமூக இடைவெளி பழக்கத்தை கடைப்பிடிக்காதுபோனால் கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தமது சுகாதார அறிவுரைகளை பின்பற்றினால் இரண்டு வாரங்களில் சிறந்த பெறுபேற்றை காணமுடியும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் அறிக்கையில் உலக சுகாதார சம்மேளனம் குறிப்பிட்டுள்ள நான்கு கட்ட கொரோனா பரவலை சுட்டிக்காட்டியுள்ளது.

முதல் கட்டம்- கொரோனா வைரஸ் இல்லை, இரண்டாம் கட்டம் - தனித்தொற்றுக்கள், மூன்றாம் கட்டம்- குடும்பம் மற்றும் குழுமத்தின் சிறிய குழுக்கள், நான்காம் கட்டம்- சமூகத்துக்குள் பரவல் என்ற அடிப்படையில் உலக சுகாதார மையம் அறிவித்துள்ள எச்சரிக்கையை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் மூன்றாம் கட்டத்தின்போது வெளியில் இருந்து வரும் ஒருவரால் நாட்டில் உள்ள ஒருவருக்கு இது பரப்பப்படலாம்.
இந்த மூன்றாம் கட்டத்திலேயே தற்போது இலங்கை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது
நான்காம் கட்டத்துக்கு இந்த தொற்று பரவுமாக இருந்தால் அது பாரியளவில் பரவக்கூடும் என்றும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.