கொரோனாவுக்காக அரசாங்கங்கள் தடுமாறும் - ஒரு தடுப்பூசியே பலனளிக்கும் - பில்கேட்ஸ் திட்டவட்டம்

Report Print Tamilini in சிறப்பு

உலகையே திணறடித்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்துள்ளது.

ஒரு வைரஸால் உலகமே அழியப்போகும் நிலை வரும் என 2015 இல் கூறிய பில்கேட்ஸ் நேற்றைய தினம் மீண்டும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.

அந்த வகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகள் இதுவரை செலவிட்ட தொகை அனைத்தும் வீண் என கூறியுள்ள பில் கேடஸ், 7 தடுப்பூசிகள் இறுதி வடிவம் பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என உலகின் பெரும்பாலான நாடுகளை சீரழித்து மக்களின் உயிர்களை காவுகொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும், கூட்டாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் தற்போதைய நிலை குறித்து விளக்கியுள்ளார் உலக செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அனைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருவதாகவும், அதில் மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தெரிவு செய்து அதற்காக பல பில்லியன் டொலர்கள் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 7 மருந்துகளும் தயாரிப்பதற்கான முழு முயற்சிகளும் தற்போது வேகமெடுத்துள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு கண்டிப்பாக உலக மக்களுக்கு பலனளிக்கும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் பல முன்னெடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்காததன் காரணம் குறித்து பேசிய பில் கேட்ஸ்,

இதுபோன்ற விவகாரங்களுக்கு அரசாங்கத்திற்கு பணம் திரட்ட முடியும், ஆனால் அதை எவ்வாறு கொண்டு செல்வது, இயக்குவது போன்றவற்றில் அரசாங்கங்கள் தடுமாறும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் இறுதி வடிவம் பெறப்போகும் 7 தடுப்பூசிகளில் 2 மட்டுமே பலனளிக்கும் என்றாலும், தாங்கள் அந்த ஏழுக்கும் நிதி அளிக்க இருப்பதாக பில் கேட்ஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதனால் பல பில்லியன் டொலர்கள் வீணாகலாம், இருப்பினும் இறுதி வடிவம் பெறும் தடுப்பூசி ஒன்றை கண்டறிவதற்கு அது பயன்படும் என்கிறார் பில் கேட்ஸ்.

கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.