கட்டுப்பாடுகளை தளர்த்த அவசரம் காட்ட வேண்டாம்! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

Report Print Kamel Kamel in சிறப்பு
583Shares

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் காட்டக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக தற்பொழுது நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசரமாக தளர்த்தப்பட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டொக்டர் டெட்ரோஸ் அட்ஹானோம் தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில் பொருளாதார ரீதியினால் பாதிப்புக்கள் காணப்பட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் நாடுகள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஐரோப்பிய நாடுகளில் நோய் தொற்று பரவல் குறைவடைந்து செல்வது ஆறுதல் அளிக்கும் அதேவேளை, ஆபிரிக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் நோய் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், துரித கதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மிகவும் பாரிய ஆபத்துக்களை உருவாக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபிரிக்காவின் கிராமிய பகுதிகளில் மருத்துவ வசதிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதாகவும் இவ்வாறான ஓர் பின்னணியில் நோய் தொற்று வேகமாக பரவி வருவது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.