இலங்கையில் கொரோனா இன்று எவருக்கும் அடையாளம் காணப்படவில்லை!

Report Print Rakesh in சிறப்பு
212Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இன்று மாலை 6 மணி வரையான 24 மணி நேரத்துக்குள் எவரும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகவில்லை.

நேற்று ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 190 ஆக உள்ளது.

இதுவரை 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாள்தோறும் குணமடைந்து வீடு செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து எமது நாடு மீண்டெழும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.

எனவே, இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடாது என்று வேண்டுகின்றோம்.

நோயாளிகள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு செல்ல வேண்டும். அதேவேளை, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் சுகாதாரத்துறை - மருத்துவத்துறையினரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும்" - என்றார்.