கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மிகவும் நீண்டகாலத்துக்கு நடத்தவேண்டிய சாத்தியப்பாடு இருப்பதாக கூறியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானியான வைத்தியர் சௌமியா சுவாமிநாதன், வேறு பொதுச்சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்த்து கடைப்பிடிக்கப்படாதபட்சத்தில் ஊரடங்கு மாத்திரம் பயனுறுதியுடையதாக அமையமுடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காசநோய் மற்றும் எச்.ஐ.வி. தொடர்பாக 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்த வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் முன்னர் இந்திய அரசாங்கத்தின் சுகாதார ஆராய்ச்சிக்கான செயலாளராகவும் 2015-2017 காலகட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸிலின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியவர்.
அவர் ' இந்து ' பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் உலகளாவிய ஆட்கொல்லி கொவிட்-19 வைரஸ் நோய் பற்றிய விபரங்களையும் அதற்கு எதிரான போராட்டத்தில் உலகநாடுகளினால் கடைப்பிடிக்கப்படுகின்ற நடைமுறைகள் மற்றும் அவற்றின் பயனுடைத்தன்மை ஆகியவை குறித்து விரிவாக விளக்கிக்கூறியிருக்கிறார்.
ஊரடங்கு தந்திரோபாயம்
உடலால் விலகியிருத்தல் ( Physical distancing ) ஊரடங்கின் ( Lockdown) கடும் முனைப்பான ஒரு வடிவமாகும். அது மக்கள் ஒருவருடன் ஒருவர் ஊடாடுவதை பெருமளவுக்கு குறைத்து சனத்தொகையில் வைரஸ் தொற்றுவதை குறைக்க உதவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. சீனாவில் ஊரடங்கிற்குப் பிறகு குடும்பங்களுக்குள் தொற்று தொடர்ந்தும் பரவிக்கொண்டிருந்தது அவதானிக்கப்பட்டது. அதனால் அவர்கள் மேலதிக நடவடிக்கையாக நோயக் குணங்குறியுடன் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களில் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டவர்கள் தனியான ஒரு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது ; அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தனியான தொற்றுத்தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்கள்.

மறுவார்த்தைகளில் சொல்வதானால், வீட்டு தொற்றுத்தடுப்புக்காவலில் இருந்து அத்தகைய காவலுக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.
அவ்வாறு செய்வதில் இருக்கக்கூடிய தர்க்கநியாயத்தைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும். நெரிசலான சூழலில் வசிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். கைகளை சுத்தமாக கழுவுதல், மேற்பரப்புகளை தொற்றுநீக்குதல், இருமலின்போது முகத்தையும் வாயையும் மூடிமறைத்தில் போன்றவை பயனுறுதியடையவையாக இருப்பதாக தெரியவந்திருக்கும் மற்றைய பொதுச்சுகாதார நடைமுறைகளாகும். இவற்றுடன் சேர்த்து முகக்கவசத்தையும் அணிந்தால் மேலும் நன்றாக இருக்கும்.
மிகவும் நீண்ட ஒரு காலத்துக்கு இந்த தொற்றுநோய்க்கு நாம் முங்கொடுக்கப்போகிறோம் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்வேண்டும்.நாளடைவில் ஊரடங்கு நடைமுறைகளை நாம் கைவிடும்போது நிலைபேறான தந்திரோபாயங்கள் குறித்து சிந்திக்கவேண்டும். மக்கள் தங்கள் பக்கவழக்கங்களை, நடத்தைகளை மாற்றவேண்டியிருக்கும். உடலால் விலகியிருத்தலை தொடர்ந்து பின்பற்றவேண்டும் ; சுகவீனமுற்றிருந்தால் தனிமையில் இருக்கவேண்டும் ; தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அதேவேளை பொதுச்சுகாதார கட்டமைப்புகள் மக்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நோய்க்குறியை அடையாளம் கண்டு ஆட்களை தனிமைப்படுத்தி சிகிச்சயைளிப்பதுடன் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்புகளை வைத்திருந்த நபர்களை தேடிக்கண்டறியவேண்டும்.
முகக்கவசங்ளை அணிதல்
தொற்றுநோய்க்கான குணங்குறிகளைக் கொண்டிருக்கும் எவரும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்பது தெளிவானது. சளிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த நோயின் குணங்குறியுடையவர்கள் முகக் கவசங்களை அணிவதுடன் கைகளை அடிக்கடி சுகாதாரமாக வைத்திருந்தால் குடும்பங்களுக்குள் தொற்று பரவல் ஏற்படுவதை கணிசமானளவுக்கு குறைக்கமுடியும் என்பது அந்த ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்கள் தொற்று நாேய்க்கு இலக்கான பெருமளவு நோயாளிகளை கையாளக்கூடிய சாத்தியம் இருப்பதால் அவர்கள் முகக்கவசங்களை அணியவேண்டியது அவசியமாகிறது.
பொதுவான சனத்தொகையைப் பற்றி நாம் பேசும்போது ஒரு தர்க்க நியாயத்தை கருத்தில் எடுக்கவேண்டும். அதாவது குணங்குறிகள் வெளிப்படாதவர்களாக இருந்தாலும் கூட, தொற்றையடையவரகளாக இருக்கமுடியும். அவர்களினால் தொற்றுநோயை பரப்பக்கூடியதாக இருக்கும். இதுவே ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணியவேண்டும் என்பதில் உள்ள தர்க்க நியாயமாகும்.
குணங்குறிகள் வெளிப்படாத நிலையில் தொற்றுநோயை பரப்பிக்கொண்டிருப்பவர்களினால் ஏற்படுத்தப்படக்கூடிய தொற்றுப்பாதிப்பு அதிகமானதல்ல.அது 10 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருப்பதாக நாம் இதுவரையில் பார்வையிட்டிருக்கக்கூடிய ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், அது கூட முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய சதவீதம் என்றும் அதையும் குறைக்கவேண்டும் என்றும் வாதம் முன்வைக்கப்படலாம். முகக்கவசத்தை அணிந்திருப்பவர்களை எவரும் அவமதிக்கக்கூடாது என்பது இன்னொரு முக்கியமான கருத்து.
முகக்கவசங்கள் அவற்றை அணிந்திருப்பவர்களை பாதுகாப்பதில்லை, மாறாக மற்றவர்களுக்கே அது பாதுகாப்பு வழங்கிறது. வலிமையாக உரக்கப்பேசினால் அல்லது தும்மினால் திரவத்துளிகள் நீண்டதூரத்துக்கு பறக்கப்போவதில்லை. ஏனென்றால் முகக்கவசம் அதைத் தடுத்துக்கொள்ளும்.
சாதாரண மருத்துவ முகக்கவசங்களோ அல்லது துணிக்கவசங்களும் அவற்றை அணிந்திருப்பவர்களை தொற்றில் இருந்து பாதுகாக்கின்றது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. முகக்கவசங்களை அணிபவர்கள் தங்களது முகத்தை அடிக்கடி தொடக்கூடிய வாய்ப்பு இருப்பது பல ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டிருக்கிறது. முகக்கவசங்களை அணிவதை நியாயப்படுத்தும்போது மனதிற்கொள்ளவேண்டிய இன்னொரு விடயம் இதுவாகும். அத்துடன் தாங்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கிறார்கள் என்பதற்காக எவரும் மெத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது.
முகக்கவசங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. தற்போதைய அறிவு நிலைவரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாடும் அதன் சொந்த பொதுக் கொள்கைகளை விருத்தி செய்துகொள்ளவேண்டும் என்று அதில் நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது. ஒரு நாட்டின் அனுபவத்தில் இருந்து மற்றைய நாடுகள் படிப்பினைகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக தரவுகள் திரட்டலை நாம் ஊக்கப்படுத்துகிறோம். ஆனால், இதில் ஒரு முன்னெச்சரிக்கை என்னவென்றால், கைகளைக் கழுவுதல் போன்ற ஏனைய காரியங்களையும் ஒருங்குசேர செய்யவேண்டும். முகக்கவசங்கள் அவற்றை அணிபவர்களை பாதுகாப்பதில்லை. நீங்கள் மற்றவர்களை பாதுகாக்கவே முக்கவசங்களை அணிகிறீர்கள். அது ஒரு நல்ல சமூகசேவையாகும்.
ஊரடங்குகள் மாத்திரம் பயன்தராது
ஊரடங்கை பொறுத்தவரை, வேறுபட்ட நாடுகள் வேறுபட்ட அணுகுமுறைகளைக் பயன்படுத்துகின்றன. ஊரடங்கின் விளைவான பொருளாதாரப் பாதிப்பும் மனிதப் பாதிப்பும் குறைந்தபட்சமாக்கப்படவேண்டியது அவசியமாகும். குடிமக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலமாக அதை உறுதிசெய்யக்கூடியதாக இருக்கும். தரமான பொதுச்சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்ந்ததாக நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் ஊரடங்கு மாத்திரம் பயனுறுதியுடையதாக இருக்கமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
வைரஸ் எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதும் அதைக் கண்டறிவதற்கு பல்வேறு தரவு மூலங்களை தேடுவதும் மிகவும் முக்கியமானவையாகும். சீனாவின் வெற்றி ஏனைய சகல நடவடிக்கைகளுடன் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் அடிப்படையிலேயே அமைந்தது. அவர்கள் தொற்றுக்கிலக்காகியிருப்பவர்களை தேடி வீடுவீடாகச் செனறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தார்கள். அத்துடன் நோயாளிகள் தொடர்புவைத்திருக்கக்கூடியவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள். நோய்க் குணங்குறிகளை கண்டறியும் செயன்முறைகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினார்கள். கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் தேவையையும் தர்க்கநியாயத்தையும் பற்றிய தகவல்களை மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவித்துவந்தார்கள்.
- Virakesari