ஊடகவிலாளர் சிவராமுக்கு அஞ்சியது சிறிலங்கா அரசு! சிரேஸ்ட ஊடகவியலாளர் துரைரட்னம்

Report Print Dias Dias in சிறப்பு

“சிறிலங்கா அரசுக்கெதிராக சிவராம் துப்பாக்கி ஏந்திய போது அவரை கண்டு அஞ்சாத சிறிலங்கா தேசம் அவர் பேனா தூக்கிய போது அஞ்சியது”

இவ்வாறு சிரேஸ்ர ஊடகவியலாளர் துரைரட்னம் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிவராம் பற்றி நிறையவே விமர்சனங்கள் உண்டு. புளொட் இயக்கத்தில் இருந்த காலத்தில் சிவராம் உள்படுகொலைகளை புரிந்தார் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிவதற்கு சிவராமே காரணமாக இருந்தார் என்றும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால் இலங்கையின் தமிழர் போராட்ட வரலாறு எழுதப்படும் போது சிவராமின் பெயர் நிட்சயம் இருக்கும்.

அது ஆயுதப்போராட்ட வரலாறாக இருக்கலாம் அல்லது சமூக வரலாறாக இருக்கலாம் எந்தப்பக்கங்களிலும் சிவராமின் முகம் தெரிவதை யாராலும் தடுக்க முடியாது.

அவன் வாழ்ந்தது 46ஆண்டுகள் மட்டும்தான். ஆனால் அந்த 46 ஆண்டுகளில் அவன் பலவற்றைச்சாதித்து விட்டு சென்றிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிவராம் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை..

எனது அப்பா 50 வயதுடன் போய் சேர்ந்துவிட்டார். நானும் 50 வயதுக்கு மேல் இருக்கமாட்டேன். போட்டுத்தள்ளிவிடுவார்கள். எப்போது போடுவார்கள் என்றுதான் தெரியவில்லை.

தன்னை நோக்கி துப்பாக்கி குண்டுகள் எப்போதும் வரலாம் என தெரிந்து கொண்ட போதும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாத சிவராமின் போக்கு துணிச்சலா, வீரமா, அல்லது அசட்டுத்தனமா என எனக்கு தெரியவில்லை.

தென் கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் விதாகர் கூறியிருப்பது போல சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு.

சிவராமை முதலில் நான் பத்திரிகையாளராக சந்திக்கவில்லை. 1981ஆம் ஆண்டு காலப்பகுதி, நான் பத்திரிகைதுறையில் காலடி எடுத்து வைத்தகாலம்.

மட்டக்களப்பில் அப்போது பிரபலமாக இருந்த இலக்கிய அமைப்பான வாசகர் வட்டத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவே நான் முதலில் சிவராமை சந்தித்தேன்.

மட்டக்களப்பில் மட்டுமல்ல வடகிழக்கில் இலக்கிய புரட்சி ஒன்றை ஆரோக்கியமான இலக்கிய விமர்சனங்களை செய்யும் அமைப்பான மட்டக்களப்பு வாசகர் வட்டத்தை உருவாக்கியதில் சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு.

ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் புகழ்ச்சிதான் விமர்சனம் என்ற நிலையை மாற்றி சரியான திறனாய்வை முன்வைத்து இலக்கிய புரட்சி ஒன்றை செய்த அமைப்பாக வாசகர் வட்டத்தை வழிநடத்திய பெருமை சிவராமையும் ஆனந்தனையுமே சாரும். அந்த இருவரும் இன்று எம்மிடம் இல்லை. இருவருமே கொடிய துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிவிட்டனர்.

மட்டக்களப்பில் மிகப்பிரபல்யம் வாய்ந்த தர்மரத்தினம் வன்னியனார் குடும்பத்தில் பிறந்த சிவராம் சிறுவயதில் மிகுந்த செல்வசெழிப்பில் வாழ்ந்தவர். அவரது பாட்டனார் தர்மரத்தினம் வன்னியனார் செனட்டராக இருந்தவர்.

ஆரையம்பதியிலிருந்து அக்கரைப்பற்று ஒலுவில் என பல பிரதேசங்களில் அவர்களுக்கு இருந்த காணி பூமியை கணக்கு பார்த்தால் இன்னும் பத்து தலைமுறைக்கு காணும் என சொல்வார்கள். ஆனால் அவற்றை எல்லாம் துறந்து ஒரு ஒட்டாண்டியாக வாழ்ந்தவர்தான் சிவராம்.

ஆரம்பகாலத்தில் இலக்கியதுறையிலும் தமிழ் இலக்கணத்தை கற்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார்.

தற்கால இலக்கியங்களை மட்டமல்ல பழம்தமிழ் இலக்கியங்களை கற்பதில் கூட மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார். வடமொழியை சேர்க்காது தமிழை எழுத வேண்டும் என்பதில் கண்டிப்பான போக்கை கொண்டவர் சிவராம்.

1983களின் பின் நான் சிவராமை இலக்கிய கூட்டங்களில் காணவில்லை. அவரது நண்பர் இராசரத்தினத்திடம் கேட்ட போது அவர் சொன்னார் இனி நீங்கள் சிவராமை சந்திக்க முடியாது. எஸ்ஆரைதான் சந்திக்கலாம் என்றார். பின்னர் சிவராம் புளொட் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.

அப்போது நல்ல இலக்கிய விமர்சகனை இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் என்மனதில் எழுந்தது. அதன் பின் சுமார் ஆறு வருடங்கள் கழித்து யாழ்ப்பாணத்தில் சிவராமை சந்தித்தேன்.

அப்போது நான் முரசொலி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளையில் முரசொலி அலுவலகத்திற்கு வந்த சிவராம் தான் யாழ்ப்பாணத்தில் புளொட் அரசியல் பிரிவின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதாக கூறினார்.

அப்போது சிவராம் புளொட் இயக்கத்தின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராக இருந்தார்.

சிவராமின் தந்தை வழி மட்டக்களப்பாக இருந்தாலும் அவரின் தாய் வழி பருத்தித்துறையை சேர்ந்தவர்களாகும்.

அதனால்தானோ என்னவோ தான் தண்டயல் பரம்பரையை சேர்ந்தவன் என்றும் தன்னுடைய இரத்தத்தில் வீரம்நிறைந்த உப்பு ரத்தம் ஓடுகிறது என பெருமையாக என்னிடம் சொல்லிக்கொள்வான்.

1989ஆம் ஆண்டு தேர்தலின் பின் சிவராம் புளொட் அரசியல் பிரிவிலிருந்து விலகிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

மீண்டும் 1991ல் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களின் வீட்டில் சிவராமை எதிர்பாராத விதமாக சந்தித்தேன் எஸ்ஆராக அல்ல தராக்கியாக....

ஒரு இலக்கியகாரனாக.... போராளியாக.... அரசியல்வாதியாக.... நான் சந்தித்த சிவராமை இப்போது ஊடகத்துறை நண்பனாக பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அதன் பின்னர் நாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.

1993ஆம் ஆண்டில் பி.பி.சி ஆனந்தி அக்காவுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டு மட்டக்களப்புக்கு வந்த சிவராமில் ஒரு உற்சாகம் தெரிந்தது.

ஆயுதப்போராட்டத்தின் மூலமே தமிழர்களுக்கான சுதந்திர நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையோடு புளொட் இயக்கத்திற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்ற போதும் பின்னர் அந்த இயக்கத்தில் நம்பிக்கை இழந்து அதிலிருந்து விலகி ஊடகவியலாளராக பயணித்துக்கொண்டிருந்த சிவராம் மீண்டும் ஆயுதப்போராட்டத்தின் நம்பிக்கை கொண்டவராக காணப்பட்டார்.

அதுவரை காலமும் ஐலண்ட் பத்திரிகையில் எழுதி வந்த சிவராம் பின்னர் அப்பத்திரிகையில் எழுதுவதை நிறுத்தி சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கும் மிக்வீக் மிரருக்கும் எழுத ஆரம்பித்திருந்தார்.

அதன் பின் ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய அவரின் கட்டுரைகளுக்கும் பின்னர் சண்டே ரைம்ஸ், மிக்வீக்மிரர் பத்திரிகைளில் எழுதிய கட்டுரைகளில் மாறுதல்கள் தெரிந்தன.

அப்போது மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் மற்றும் தினக்கதிர் வாரப்பத்திரிகைகளின் ஆசிரியராக நான் இருந்தபோது சிவராம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்தால் அப்பத்திரிகை அலுவலகத்திலேயே அதிக நேரத்தை கழிப்பார்.

மட்டக்களப்புக்கு வரும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான்கரைக்கு சிவராமும் நானும் செல்வது வழக்கமாகும். சில வேளைகளில் நாங்கள் இராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டதும் உண்டு.

1994ஆம் ஆண்டுகளின் பின் மட்டக்களப்பில் ஊடகத்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்ட காலம் என்றும் சொல்லலாம். அந்த மாற்றத்திற்கு காரணமானவர்களில் சிவராமும் ஒருவர்.

ஊடகவியலாளர்களுக்கான ஒரு அமைப்பாக மட்டும் செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை மட்டக்களப்பின் அரசியல் சமூக விடயங்கள் பக்கம் திசை திருப்பியவர் சிவராமாகும்.

ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அடிக்கடி கூறிவந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தொடர்ச்சியாக அரசியல் கருத்தரங்குகளை நடத்துவதற்கு உற்சாகம் கொடுத்து வந்தார்.

மட்டக்களப்பில் வாசகர் வட்டம் எவ்வாறு இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்ததோ அதேபோல சிவராமின் பங்களிப்புடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் குறிப்பிட்ட அளவு அரசியல் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தது எனலாம்.

1998ஆம் ஆண்டில் வீரகேசரி ஊடகவியலாளர்களான மாணிக்கவாசகம், ஸ்ரீகஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களின் விடுதலைக்காக சட்டநடவடிக்கை எடுப்பது உட்பட அவர்களின் விடுதலைக்காக தமிழ் ஊடகவியலாளர்கள் தேசிய மட்டத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தில் கூட சிவராமே முக்கியமாக இருந்தார்.

வடகிழக்கில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணனி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமை சிவராமையே சாரும்.

அண்மையில் மறைந்த திருகோணமலையில் உள்ள இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் குருநாதனுடன் மனம்நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள்.... கணனி உலகிற்கு கொண்டுவந்து பத்திரிகை உலகில் தனக்கு புதிய மாறுதலை ஏற்படுத்தி தந்தவர் சிவராம் என சொன்னார்.

கணனி அறிவு எனக்கு இல்லையே என சொன்னபோது அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கணனி உங்களுக்கு கற்றுத்தரும் என உற்சாகம் ஊட்டி பத்திரிகைதுறை வாழ்க்கையின் புதிய மாறுதலை தனக்கு தந்தவர் சிவராம் தான் என குருநாதன் சொன்னார்.

குருநாதனுக்கு மட்டுமல்ல வடகிழக்கில் பல பத்திரிகையாளர்களுக்கு பல வழிகளிலும் பக்கதுணையாக நின்றவர் சிவராம்.

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்த சிவராம் 2000ஆம் ஆண்டில் நவக்கிரகங்களாக இருந்த தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்குவதில் சிவராமே மூலகர்த்தாவாக இருந்தார்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தில் இருந்த நாம் அவருக்கு பக்கபலமாக இருந்து பயணித்தாலும் கடினமான அந்த பயணத்தின் சாரதியாக இருந்தவர் அவர்தான்.

சிவராமை பலரும் அரசியல் ஆய்வாளராகத்தான் அறிந்திருக்கிறார்கள். அவருக்கு அரசியலை விட தமிழ் இலக்கியத்திலும் ஆழமான பார்வை இருந்து வந்தது.

வெளிஇடங்களை விட மட்டக்களப்பு மக்கள் அவரின் இலக்கிய பேச்சை கேட்பதற்கென்று பெருந்தொகையானோர் கூடுவதுண்டு. நகைச்சுவையுடன் கூடிய அவரின் இலக்கிய உரைக்கு உதாரணமாக ஒன்றை சொல்லலாம்.

வாசகர் வட்டம் நடத்திய இலக்கிய கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு சிவராம் அழைக்கப்பட்டிருந்தார். அன்று காலையில்தான் கொழும்பிலிருந்து சிவராம் வந்திருந்தார்.

வந்தவுடன் வாசகர் வட்ட நண்பர்கள் அவருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தனர். கருத்தரங்கு முடியும் வரை கள்ளு என்ற கதையே இருக்க கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

வாசகர் வட்ட நண்பர்களின் உத்தரவை ஏற்று கொண்டு கருத்தரங்கிற்கு வந்த சிவராம் தன் உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்திற்கு பேசுவதற்கு அழைத்த தன்னுடைய நண்பர்கள் கூட்டம் முடியும் வரை கள்ளு என்ற பேச்சே வாயில் வரக்கூடாது என உத்தரவு போட்டிருப்பதாக கூறிய சிவராம்...

ஒளவையார் முதல் தமிழ் புலவர்கள் எல்லாம் பழம் பெரும் இலக்கியங்களில் கள்ளின் பெருமை பற்றி பேசியிருக்கும் விடயங்களை மிக அழகாக இலக்கிய நயத்துடன் பேசினார்.

அவரின் உரையின் பெரும்பகுதி இலக்கியங்களில் புலவர்கள் கள்ளின் பெருமை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாகவே இருந்தது.

கள்ளைப்பற்றியே பேச்சே இருக்க கூடாது என உத்தரவு போட்ட வாசகர் வட்ட நண்பர்கள் சிவராமிடம் மாட்டிக்கொண்டு தவித்தனர்.

தோல்விகள் இழப்புக்கள் பற்றி சிவராம் தளர்ந்ததில்லை, அழுது துவண்டதும் இல்லை. அவன் வாழ்க்கையில் இருதடவைகள் மட்டுமே தான் இனி பெறமுடியாத ஒன்றை இழந்து விட்டதாக அழுதிருக்கிறான்.

முதலாவது அவனின் தாயாரின் மரணத்தின் போது...

சிறுவயதில் தனது தந்தை இறந்தபின் அவனின் அனைத்து முன்னேற்றங்களிலும் வளர்த்தெடுத்த தாய்க்கு மட்டுமே கட்டுப்பட்ட ஒருவனாக சிவராம் வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

சிவராம் புளொட் இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்ற போது எப்படி தன்னுடைய அறையில் பொருட்களை வைத்து விட்டு சென்றானோ அந்த அறையை அப்படியே பாதுகாத்து தினமும் சுத்தம் செய்து ஐந்து வருடங்களாக காத்திருந்த தாயின் அன்பைப்பற்றி சிவராம் அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வான்.

இரண்டாவது.. சுனாமியின் போது. அவன் மிகவும் நேசித்த மருமகன் சேசாத்திரி இறந்தபோது...

தன்னுடைய வாரிசாக வரக்கூடியவன் என சேசாத்திரியை சிவராம் நம்பியிருந்தான். சிவராமை போன்றே ஆளுமை மிக்க சேசாத்திரியை சுனாமி அள்ளிச் சென்ற போது அந்த இழப்பை தாங்கமுடியாது தவித்ததை நான் அறிந்திருக்கிறேன்.

ஆங்கில ஊடகத்துறையின் மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு சுமார் பல ஆண்டுகளாக ஆங்கிலப்பத்திரிகையில் எழுதி வந்தாலும் பிற்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

எவ்வளவுதான் தமிழ் மக்களின் பக்க நியாயத்தன்மைகளை தென்னிலங்கை சிங்களவர்களுக்கு சொல்லி வந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற சலிப்பின் காரணமாகவே தான் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு தனது மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் பத்திரிகைகளில் எழுத தொடங்கியிருப்பதாக இறுதிக்காலத்தில் சிவராம் சொல்லியிருந்தார்.

மட்டக்களப்பில் மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் அவர்கள் மத்தியில் தமது விடுதலைபற்றிய சரியான பார்வை இருக்க வேண்டும் என்பதில் சிவராம் உறுதியாக இருந்தார்.

15 ஆண்டுகாலம் ஊடகத்துறையில் பணியாற்றிய சிவராம் அவர் இறக்கும் வரையான காலப்பகுதிவரை தான் சார்ந்த சமூக அரசியல் துறைகளில் அவர் பதித்த தடங்கள் பல.

நெருக்கடியான காலகட்டங்களில் துணிச்சலுடன் செயற்பட்ட ஊடகப்போராளி அவர். துப்பாக்கியை விட்டு பேனாவை தூக்கிய அவர் அதன் மூலம் தான் சார்ந்த இனத்தின் விடுதலைக்காக மிகக்கடுமையாக போராடினார்.

சிறிலங்கா அரசுக்கெதிராக சிவராம் துப்பாக்கி ஏந்திய போது அவரை கண்டு அஞ்சாத சிறிலங்கா தேசம் அவர் பேனா தூக்கிய போது அஞ்சியது.

பகுத்தறிவு கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த சிவராம் எந்த ஒரு இனமும் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் அந்த இனம் அரசியல் தெளிவுள்ள சமூகமாக உறுதியான அரசியல் தலைமையை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார்.

நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த ஆபத்தையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன் என 2004 நவம்பர் 5ஆம் திகதி வீரகேசரி வாரஇதழில் எழுதியிருந்தான்.

எந்த ஆபத்து வந்தாலும் இந்த மண்ணில்தான் மடிவேன் என்ற வைராக்கியத்தில் சிவராம் வென்றுவிட்டான்.”