விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடுகள் மீட்பு! சோதியா படையணியினர் என சந்தேகம்

Report Print Yathu in சிறப்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான முதல்நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இன்று முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது துப்பாக்கிகள் மூன்று, மகசீன்கள் எட்டு, அவற்றுக்குரிய தோட்டாக்கள், கைக்குண்டுகள் 2 என்பன மீட்கப்பட்டிருந்தன.

பெண்களின் ஆடைகளுடன் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன.

அதேவேளை அந்த எலும்புக்கூட்டு எச்சத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்ற இலக்கத்தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தகட்டில் “த வி பு - ஞா - 0164” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இலக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவான சோதியா படையணியினர் பயன்படுத்தும் இலக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தொடர் இலக்கம் 0164 ஆக காணப்படுவதால் அவர் குறித்த பிரிவினரின் மூத்த போராளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் 02ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.