மட்டு சீயோன் தேவாலய தாக்குதல்! கொழும்பிலிருந்து பஸ்ஸில் வெடிகுண்டை கொண்டு சென்ற தற்கொலைதாரி

Report Print Murali Murali in சிறப்பு
487Shares

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தத் தேவையான குண்டுகள் அடங்கிய பொதியை தற்கொலைதாரி மொஹமட் நஸார் மொஹமட் அஸாத் கொழும்பு மருதானையிலிருந்தே கொண்டுசென்றிருக்கின்றார்.

அதுவும் மருதானை – சாஹிரா கல்லூரிக்கு முன்பாக கொழும்பு – கல்முனை பஸ்ஸில் தாக்குதல் நடத்த முன்தினம் இரவு 8.51க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய அலாவூதின் மெஹமட் என்பவரே அவருக்கு பஸ்ஸின் இருக்கையை முன்பதிவு செய்தாகவும் சாட்சியாளர் கூறினார்.

குறித்த தற்கொலைதாரி தாக்குதல் நடத்தப்பட்ட தினமான ஏப்ரல் 21ம் திகதி அதிகாலை 2.14க்கு மட்டக்களப்பு நகரில் இறங்கியுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நிமிடங்களில் மட்டக்களப்பு ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு நபர் ஒருவருடன் சென்றுள்ளார்.

குறித்த நபரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக இங்கு வந்ததாகவும், பொதிகளை ஏற்றி இறக்குவதற்காக தன்னை அழைத்ததாகவும் தற்கொலைதாரியுடன் சென்ற நபர் பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

குண்டுதாரி அதிகாலை 4.39 மணி வரை பள்ளிவாசலுக்கு முன்னால் காத்திருந்தாகவும் அவர் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் அவருக்கு அருகில் தரையில் கிடந்தாகவும் ஆனால் அந்த வழியாக சென்ற பொலிஸ் மொபையில் கண்காணிப்பு வாகனங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என அவர் ஆணைக்குழுவில் விளக்கமளித்தார்.

அதிகாலை 4.39 அளவில் பள்ளிவாசல் திறக்கப்பட்டதாகவும், அப்போது குண்டுதாரி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பல மணி நேரம் அமைதியின்றி நடந்து கொண்டதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் கூறினார்.

காலை 8.32 அளவில், குண்டுதாரி சிவப்பு நிற டி-சேர்ட் அணிந்து ஒரு பையுடனும், கையில் ஒரு பையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டதாக சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

அவ்வாறு வந்தவர் காலை 9.03 அளவில் சியோன் தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்தாகவும் பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் நடந்த இடத்தில் குண்டு தாரியின் கையடக்க தொலைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய அவர் அதற்கு பயன்படுத்தப்பட்ட சிம் மற்றொரு நபரின் பெயரில் இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தாக கூறினார்.

குறித்த தற்கொலைதாரி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியின் சிம் அட்டை 2018ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் இன்சாம் ஆகிய நபரால் பதிவுசெய்யப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கின்றது என்று பொலிஸ் பரிசோதகர் இன்றைய சாட்சியமளிப்பில் தெரிவித்தார்.