விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய விவகாரம்! கருணா வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு
920Shares

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய பெருந்தொகை ஆயுதங்களையும், பணத்தையும் தாம் வெலிஓயா முகாமில் வைத்து பொறுப்பேற்றதாக கருணா அம்மான் என்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2005ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெருந்தொகை பணத்தை வழங்கியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தகவலை கருணா வெளியிட்டார்.

ஆனையிறவில் 3 ஆயிரம் படையினரைக் கொன்றதாக அம்பாறை நாவிதன்வெளியில் வைத்து வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தம்மீது கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் சஜித் பிரேமதாசவின் கருத்தை கணக்கில் எடுக்கவேண்டாம் என்று கூறியதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தம்மிடம் இனவாதக்கொள்கை இல்லை என்றுக்குறிப்பிட்ட அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதக்கருத்துக்களை பரப்புவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் இந்த முறை தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறமுடியும் என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.