உத்தேச மேற்கு கரை இணைப்பு திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேலிடம் கோரிக்கை!

Report Print Ajith Ajith in சிறப்பு

உத்தேச மேற்கு கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 44வது அமர்வில் ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் செயல் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தவிடயம் தொடர்பில் மனித நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் முன்வைத்த அறிக்கையை கவனத்தில்கொண்ட நிலையிலேயே இலங்கையின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்குக்கரையை இணைக்கும் திட்டம் ஒரு உரிமை மீறலாகும்.

இஸ்ரேலின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஜோர்டான் பள்ளத்தாக்கிலும் வாழும் பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகளில் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் இலங்கையின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் யோசனையை நடைமுறைப்படுத்தி பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு இலங்கையின் பிரதிநிதி இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தினார்