முக்கிய பதவிகளின் சிறுபான்மையினரின் ஆக்கிரமிப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சாட்சி தெரிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு

2015ம் ஆண்டு சட்டக்கல்லூரிக்கு வழமைக்கு மாறாக அதிகமான முஸ்லிம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்தாக உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது சிறுபான்மையினர் முக்கிய பதவிகளை ஆக்கிரமிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

2003ம் ஆண்டு 203 மாணவர்களில் ஐந்து முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே சட்டக்கல்லூரியில் அனுமதி பெற்றனர். எனினும் 2015ம் ஆண்டில் அதிகளவான முஸ்லிம் மாணவர்கள் அனுமதிப்பெற்றனர்.

2012ம் ஆண்டில் 78 முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதிப்பெற்றனர்.

இதனுடன் ஒப்பிடும்போது 2015இல் முஸ்லிம் மாணவர்களின் சட்டக்கல்லூரி அனுமதி 25.24 வீதத்தினால் அதிகரித்திருந்ததாக சாட்சி தெரிவித்தார்.

இந்தநிலையில் இது தொடர்பில் தாம் குறித்த நிறுவகங்களுக்கும் நீதியமைச்சுக்கும் எச்சரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன சாட்சியம் அளித்தார்.

அத்துடன் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தாம் கோரியதாகவும் நிலந்த குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளும் அவர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு பரீட்சையின்போது உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாக இதன்போது சாட்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பிரான்ஸ் போன் நாடுகளில் இடம்பெற்றமையை போன்று சிறுபான்மையினர் முக்கிய பதவிகளில் அதிகாரம் செலுத்தும் நிலையை உருவாக்கும் என்று தாம் உரிய தரப்புக்களுக்கு அறிவித்ததாக சாட்சி கூறினார்.

இதேவேளை 2013ம் ஆண்டில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மாதம் ஒன்றுக்கு ஹலால் சான்றிதழ்களின்மூலம் 1.5 மில்லியன் ரூபா வருவாயை பெற்றதாக சாட்சி தெரிவித்தார்.

அத்துடன் 4500 உற்பத்திகளுக்காக 204 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ்களை பெற்றிருந்தன என்றும் சாட்சியான அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன குறிப்பிட்டார்.