13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விளம்பரங்களில் நடிக்க தடை? தொலைக்காட்சிகளுக்கு வரும் கட்டுப்பாடு

Report Print Murali Murali in சிறப்பு

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பது போன்றவற்றில் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து கடுமையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது.

13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதை தடைசெய்வது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும், குறித்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தவறும் தொலைக்காட்சி அலைவரிசைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது குறித்து தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பாக ஊடக அமைச்சுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், வழிகாட்டுதல்களின் வரைவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை விளம்பரங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் சட்டங்களை திருத்துவதற்கும், சர்வதேச தரத்தின்படி வயது வரம்பை 13 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உயர்த்துவதற்கும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் சர்வதேச விளம்பரங்களுக்கும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கார்ட்டூன்களுக்கும் குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக பேராசிரியர் விதானபதிரண மேலும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து, அண்மையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆங்கில ஆசிரியராகவும் காட்டிக் கொண்ட அந்த நபர், சிறுவர்கள் பலரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் காணொளிகளை பொலிஸார் மீட்டனர். அவை சந்தேக நபரால் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

2018ம் ஆண்டு முதல் இந்த நபர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.