வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 111 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை!

Report Print Murali Murali in சிறப்பு
692Shares

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 111 குற்றவாளிகளை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும், 20 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை பெறுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பதுங்கியிருக்கும் சுமார் 100 குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையிலும், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்த உத்தரவை பெறுவதற்கான செயல்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகெங்கிலும் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நீல அறிக்கைகளை பெறவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற 84 நீல அறிக்கைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவின் டி.ஐ.ஜி நுவான் வெதசிங்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.