அமீரகத்தில் இருந்து 7 மற்றும் 9ம் திகதிகளில் இலங்கைக்கு சிறப்பு விமான சேவை!

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமீரகத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வரும் நோக்கில் எதிர்வரும் 7 மற்றும் 9ம் திகதிகளில் சிறப்பு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமீரகத்துக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“கொரோனா பரவலை தடுப்பதற்காக அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

எனினும் அங்குள்ள வைத்தியசாலை மற்றும் பொது இடங்களில் தனிமைப்படுத்தும் இடத்தை பொறுத்து பயணிகள் அமீரகத்தில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த மே மாதத்தில் இருந்து இயக்கப்பட்ட 6 சிறப்பு விமானங்களில் சுமார் 1,800 பேர் சென்றனர். தற்போது அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் 21 ஆயிரம் பேர் இலங்கைக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது துபாயில் இருந்து இலங்கைக்கு விமான சேவை மீண்டும் இயக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் கர்ப்பிணிகள், மாணவர்கள், மருத்துவ அவசர தேவையுடையோர், வயதானவர்கள், வேலையிழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனவே நிலைமையை பொறுத்து பயணிகள் செல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் விசா ரத்து செய்யப்பட்டவர்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

எவரேனும் அபராத தொகை கட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் அவர்களுக்கு அமீரக அரசிடம் அந்த தொகையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

விசாவை ரத்து செய்தவர்கள், விசா காலாவதியானவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு திரும்ப எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை அபராதம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமீரக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உதவிகள் தேவைப்படுபவர்கள் இலங்கை தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமீரகத்தில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு விமான கட்டணம் செலுத்த வசதியில்லை என்றால் அதற்கான சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும் இலங்கை சென்ற பின்னர் அங்கு கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தப்படும் வசதி, உணவு உள்ளிட்டவையும் அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் எதிர்வரும் 7 மற்றும் 9ம் திகதி களில் இந்த விமானங்கள் இயக்கப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.