லெபனான் வெடிப்பு சம்பவம்! இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

புதிய இணைப்பு

லெபானானின் பெய்ரூட் நகரில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மேலும் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் களஞ்சியம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டொன் அமோனியம் நைத்ரேட் வெடித்து சிதறியதில் 135 பேர் உயிரிழந்தனர்.

முதலாம் இணைப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள இலங்கை தூதுரகம் அறிவித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இலங்கையர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து லெபனான் பொது சுகாதார அமைச்சகத்திடம் மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரக கட்டிடம் மற்றும் அதன் இராஜதந்திர பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தூதரக அதிகாரிகள் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற விரும்புபவர்கள், பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை +961 5769585 அல்லது அதன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி (slemb.beirut@mfa.gov.lk) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதனிடையே, 3.5 மீட்டர் அளவிலான நிலநடுக்கத்தின் சக்தியுடன் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய லெபனான் அதிகாரிகள் விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகளில் அவசரகால ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 200,000 க்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர் என்று பெய்ரூட்டின் ஆளுநர் மர்வான் அபூத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் லெபனானின் ஜனாதிபதி மூன்று நாள் துக்க காலத்தை அறிவித்துள்ளதுடன், 100 பில்லியன் லிரா அவசர நிதியை அரசாங்கம் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.