24 சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா! கொழும்பிலுள்ள சீன தூதரகம் கண்டனம்

Report Print Ajith Ajith in சிறப்பு
142Shares

தென்சீனக் கடலை "இராணுவமயமாக்குவதாக குற்றம் சுமத்தி 24 சீன நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்தமையை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் கண்டித்துள்ளது.

தடையை எதிர்கொள்ளும் 24 சீன நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (சி.எச்.இ.சி) தாய் நிறுவனமான சீன கொம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (சி.சி.சி.சி) அடங்கும்.

இந்தநிலையில் குறித்த தடை "முற்றிலும் உண்மைக்கு எதிரானது மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும்”என்று குறிப்பிட்டுள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர், அமெரிக்கா தமது தவறுகளை சரிசெய்து உடனடியாக சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச மற்றும் நியாயமற்ற பொருளாதாரத் தடைகள் மற்ற இறையாண்மை நாடுகளின் உள்விவகாரங்களில் கடுமையாக தலையிடுகின்றன.

எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது, "என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இனவெறி எதிர்ப்பு, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கொரோனா தொற்றுநோய் உள்ளிட்ட சில உள்நாட்டு சவால்களை அமெரிக்கா எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் அமெரிக்க நிர்வாகம் அதன் உள்நாட்டுப் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவ தளங்களை பராமரிப்பதன் மூலமும், சுமார் 165,000 துருப்புக்களை வெளிநாடுகளில் நிறுத்துவதன் மூலமும், வெளிநாட்டு தளங்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவழிப்பதன் மூலமும் உலகத்தையும் பிராந்தியத்தையும் அமெரிக்காவே இராணுவமயமாக்கி வருகிறது.

இதேவேளை தென் சீனக்கடலுக்கு அமெரிக்கா அடிக்கடி தமது கப்பல்களை அனுப்பி வைக்கிறது.

பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்து தமது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி தமது சக்தியை வெளிப்படுத்தவும், இராணுவ ஆத்திரமூட்டல்களில் ஈடுபடவும், பிராந்திய நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களையும், சாதாரண ஒழுங்கையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையிலும் அமெரிக்கா செயற்படுவதாக சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.