இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்! இந்தியக் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் வெளியான அறிவிப்பு

Report Print Rakesh in சிறப்பு

எம்.டி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் நேற்று இரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படைப் பிரிவு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான 'எம்.டி. நியூ டயமண்ட்' என்ற கப்பலில் நேற்றுக் காலை தீப்பரவல் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்னர் இன்றிரவு எம்.டி. நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என இலங்கை விமானப்படைப் பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படை பிரிவு இன்றிரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று இன்று காலை தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தீக்காயங்களுடன் நேற்று மீட்கப்பட்ட மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏனைய 21 பணியாளர்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.