இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த கப்பல்! தற்போதைய நிலை குறித்த அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த MT New Diamond என்ற கப்பல் 40 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற MT New Diamond என்ற கப்பல் இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் கடந்த 3ம் திகதி தீப்பற்றி எரிந்தது.

கப்பலின் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, நேற்று மாலை 7.00 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீவிபத்து குறித்து அறிந்த இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவற்படை என்பன இணைந்து கூட்டு நடவடிக்கையாக தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தன.

இதன்படி, சுமார் 35 மணி நேரம் நீடித்த ஒரு பாரிய நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று இரவு 7 மணியளவில் 20 கடல் மைல்களுக்கு அருகில் இருந்தபோது கப்பலின் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து MT New Diamond கப்பல் “டக்போட்” ஐப் பயன்படுத்தி ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது 40 கடல் மைல் தொலைவில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் கசிவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க இருபத்தி இரண்டு இந்திய கடலோர காவல்படை பொறியாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.