20வது திருத்தம் ஜனாதிபதியின் அதிகார எல்லையை கேள்விக்கு உட்படுத்தும் தார்மீகத்தை நீக்குகிறது!

Report Print Ajith Ajith in சிறப்பு

2020 செப்டம்பர் 2ம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ம் திருத்தத்தால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மற்றும் இலங்கையின் ஜனநாயகத்தில் அதன் தாக்கம் குறித்து மாற்று கொள்கைக்கான நிறுவனம் தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தம் 2015 இல் பத்தொன்பதாம் திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களை நிராகரிக்கிறது.

அத்துடன் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 18ம் திருத்தத்தின் தடையற்ற நிறைவேற்று அதிகாரத்தை மீளக்கொண்டு வருவதாக மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

"ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திற்கான ஐந்தாண்டு கால பதவிகளை தக்கவைத்துக்கொள்வது, ஜனாதிபதி பதவிக்கு இரண்டு கால வரம்பு மற்றும் தகவல் உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பது ஆகியறை வரவேற்கத்தக்கவை.

எனினும் யோசனையில் முன்மொழியப்பட்ட பிற மாற்றங்கள் அதிகாரங்களை பிரித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை சுதந்திரங்களை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

20ம் திருத்த மசோதாவால் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள் ஜனாதிபதியின் அதிகார எல்லையை கேள்விக்கு உட்படுத்தும் தார்மீகத்தை நீக்குவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, அரசியலமைப்பு பேரவையின் பன்முகத்தன்மை மூலம் சுயாதீன நிறுவனங்களுக்கான முக்கிய நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான வரம்புகளை 20வது திருத்தம் நீக்குகிறது.

மாற்றாக நாடாளுமன்ற பேரவை வெறும் ரப்பர் முத்திரையாக காட்டப்பட்டுள்ளது.

திருத்தத்தில் முக்கிய நிறுவனங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்க ஜனாதிபதிக்கு பாரிய அதிகாரங்களை திறம்பட வழங்குவதுடன், அரசியல் நிர்வாகத்திலிருந்து சுயாதீனமாக குடிமக்களின் நலனுக்காக செயல்படும் நிறுவனங்களை அரசியல்மயமாக்குதல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று நடவடிக்கைகளுக்கு குடிமக்கள் சவால் விடுக்கும் வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மற்றும் பிற அமைச்சர்களை நியமித்தல் மற்றும் பதவி நீக்கம் செய்வதற்கான பிரதமரின் ஆலோசனையின் தேவையை நீக்குவதன் மூலம் நிர்வாகத்திற்குள் ஜனாதிபதி அதிகாரம் குறித்த வரம்பு ரத்து செய்யப்படுகின்றது.

18ம் திருத்தத்தைப் போலவே, அவசர அவசரமாக இயற்றப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தம், அரசியலமைப்பு சமநிலையை குழப்பி முரண்பாடுகளை உருவாக்கும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2020 இல் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஜனநாயக ஆணையை ஒரு வெற்று கடதாசியாக தவறாக கருதப்படக்கூடாது.

அவ்வாறு செய்வது 1970, 1977 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் செய்த அதே தவறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.