இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஐநா சபையில் முக்கிய நாடுகள் ஏமாற்றம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான 30-1 யோசனையை, ஆதரிக்காத இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் முக்கிய குழு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கனடா, ஜேர்மனி, வடக்கு மேசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளே இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவின் மனித உரிமைகளுக்கான சர்வதேச தூதர் ரீட்டா பிரஞ்சு இது தொடர்பான அறிக்கையை இன்று அமர்வின்போது வெளியிட்டார்.

இலங்கையில், சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர இலங்கை அரசாங்கம் ஒரு புதிய உள்நாட்டு செயல்முறைக்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும், இதுபோன்ற செயல்முறைகள் உண்மையான நல்லிணக்கத்தை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களது எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைக் குழுக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இறுக்கநிலை குறித்து குழு தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் அந்தக்குழுக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான முக்கிய குழு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.