உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணையில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்பிருந்து தாம் தேசிய புலனாய்வுத்துறையில் தலைமைப்பணிப்பாளராக பணியாற்றியபோதும் அரச புலனாய்வுத்துறையினர் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தம்மிடம் எந்த ஆலோசனையையும் கோரியதில்லை என்று தேசியப் புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் சிசிர மெண்டிஸ் சாட்சியம் அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்த்தனவுக்கு பாதுகாப்பு செயலாளருடன் மட்டுமே தொழில்முறை பணி உறவு இருந்ததாக சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 2019, ஏப்ரல் 4ம் திகதியன்று பெறப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறை அறிக்கை குறித்து ஆணையாளர்கள் கேட்டபோது, ஏப்ரல் 8ம் திகதியன்று அந்த அறிக்கையை தாம் பெற்றதாகக் கூறினார்.

அதில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தௌவ்ஹீட் ஜமாஅத்தின் தாக்குதல் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சட்டமா அதிபரின் பிரதிநிதி, இந்தப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

அறிக்கை கிடைத்தவுடன் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவை சந்திக்க முயன்ற போதிலும், இந்திய பாதுகாப்பு செயலாளரை சந்திப்பதில் அவர் முனைப்பாக இருந்தமையால் அவரை சந்திக்கமுடியவில்லை.

எனினும் அதே நாளில் பிற்பகல் பெர்னாண்டோவை சந்தித்ததாகவும் அரச புலனாய்வுத்துறை பணிப்பாளரால் வழங்கப்பட்ட உளவுத்துறை குறித்து அவருக்குத் தெரிவித்ததாகவும் சிசிர மெண்டிஸ் குறிப்பிட்டார்.

இதன்போது ஏப்ரல் 9இல் இடம்பெற்ற புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த தகவல்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்று ஆணையாளர்கள்; சாட்சியைக் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர் குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த புலனாய்வு தகவல் விடயம் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஏப்ரல் 8 மதியம் தம்மை அழைத்து, சஹ்ரானைப் பற்றிய உளவுத்துறை பற்றி கேட்டதாக சாட்சி குறிப்பிட்டார்.

இது ஒரு அரசியல் பிரச்சினையாக இருக்கக்கூடும் என்றும் அவர் தம்மிடம் கூறியதாகவும் சாட்சி தெரிவித்தார்.

சஹ்ரான் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற விடயத்தில் ஒரு அரசியல்வாதியின் சகோதரரும் தொடர்பட்டுள்ள தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக நிலந்த ஜயவர்த்தன கூறியதாக சாட்சியான சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.

எனினும் குறித்த புலனாய்வுத் தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பான தகவலை நிலந்த ஜயவர்த்தன தமக்கு தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் சாட்சியங்களை பின்னரே அந்த தகவல் ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகவரால் அனுப்பப்பட்டதை அவர் அறிந்ததாகவும் மெண்டிஸ் குறிப்பிட்டார்.