அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பாரம்பரிய ஊடக சந்திப்புகளை தாண்டி இன்று தங்கொட்டுவ பகுதியில் ஒரு வித்தியாசமான முறையில் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருக்கும் அருந்திக பெர்னாண்டோ ஒரு தென்னை மரத்தில் ஏறி, அதிலிருந்தவாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
உலக சந்தையில் தேங்காய் தொடர்பான பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவ பகுதியில் உள்ள தனது தோட்டத்திலுள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி பல தேங்காய்களை பறித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேங்காய் மரத்திலிருந்தவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தேங்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மரத்திற்கு 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.
தேங்காய் பிரித்தெடுத்தல் மற்றும் கன்று உற்பத்தி செய்வதற்கு தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்று கூறிய அவர், தேங்காயின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூறினார்.
இதேவேளை, அருந்திக பெர்னாண்டோ தேங்காய் மரத்தில் ஏற வரக்காபொல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்த இயந்திரத்தையும் பயன்படுத்தினார்.
அடுத்த சில மாதங்களில் இந்த சாதனம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.