விடுதலைப் புலிகள் உறுப்பினரின் உறவினர் நியமனம் பல சிக்கல்களை ஏற்படுத்தியது! மைத்திரி வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு

கடந்த அரசாங்கத்தால் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் பதவிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இந்த சாட்சியத்தை வழங்கினர்.

இதுபோன்ற பிரச்சனைகள் காரணமாக தமது பதவிக்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

தனது பதவிக்காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினரால் இந்த மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாடுகளை செய்து வந்தது.

இந்த முறைப்பாடுகள் காரணமாக, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளில் இணையும் வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று மைத்திரிபால குறிப்பிட்டார்.

இதனையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரை அழைத்து வினவியபோது இறந்துப்போன தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரது உறவினர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,

அவரே இந்த முறைப்பாடுகளை செய்து வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தம்மிடம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன சாட்சியம் அளித்தார்