ரணிலின் மனைவிக்கு கிடைத்த சஹ்ரான் ஹாஷிமின் உரைகள் அடங்கிய இறுவட்டு! விசாரணையில் வெளியான தகவல்

Report Print Ajith Ajith in சிறப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்து பொருத்தமான பகுப்பாய்வு எதுவும் நடத்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2019 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்திருந்தமையை ரணில் விக்கிரமசிங்க இதன்போது ஏற்றுக்கொண்டார்.

சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, முன்னைய அரசாங்கத்தில் அங்கம் பெற்றிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தமக்கு தகவல் அளித்ததாக கூறினார்.

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஒருங்கிணைப்பு செயலாளர் முகமது நஸ்லிம் மீது மார்ச் 2019 இல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றமையை அடுத்து நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத நடைமுறைகள் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் கவனத்தை செலுத்தத் தொடங்கினர் என்று ரணில் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அமைச்சர்களும் அவர்களது அரசியல் கட்சிகளும் கிழக்கு மாகாணத்தின் நிலைமையை நன்கு அறிந்திருந்ததாகவும் அவர்கள் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் ரணில் தெரிவித்தார்.

தமது மனைவியான மைத்திரிக்கு சஹ்ரான் ஹாஷிம் ஆற்றிய உரை உள்ளடக்கிய ஒரு இறுவட்டு கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்த ரணில் விக்கிரமசிங்க, அதன் உள்ளடக்கம் தொடர்பில் அறிந்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் ரவுஃப் ஹக்கீமிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

அவரும் குறித்த இறுவட்டில் என்ன இருக்கிறது என்பதை தமக்கு விளக்கியதாக ரணில் தெரிவித்தார்.

இதேவேளை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கையை தாம் பெற்றிருந்தால், அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் காவல்துறை மற்றும் புலனாய்வு பிரிவுக்கு அழைத்து தாக்குதல்களை கொடுத்திருக்க முடியும் என்று ரணில் சுட்டிக்காட்டினார்.

எனினும் வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை 2019 ஏப்ரல் 20ஆம் திகதியே கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாகவே வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மையை பார்த்துக்கொள்ள இந்திய உயர் ஸ்தானிகரை அழைத்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சாட்சியம் வழங்கினார்.