பிரித்தானியாவில் மீண்டும் உயிர்த்தெழுந்த விடுதலைப் புலிகள்! பத்தி எழுத்தாளர் சேனாளி வடுகே எச்சரிக்கை

Report Print TGTE Canada Media in சிறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தில் வெளிவந்துள்ள முதற்கட்ட தீர்ப்பு என்பது வே.பிரபாகரனை மீண்டும் உயிர்த்தெழ வைத்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தினை சிங்கள பத்தி எழுத்தாளர் சேனாளி வடுகே எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினை தட்டியெழுப்ப வேண்டிய ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை ஓர் பயங்கரவாதப் போராட்டமாக சித்திரித்து, பல்வேறு ஆங்கில ஊடகங்களில் தனது பத்திகளை எழுதி வரும் சேனாளி வடுகே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான போலிப்பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்பவராக இருக்கின்றார்.

தியாகதீபம் லெ.கேணல் தீலிபன் நினைவேந்தலுக்கு தாயகத்தில் பல்வேறு தடைகளை சிறிலங்கா விதித்திருந்த நிலையில், இணைவழியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வினை கடுமையாக சமீபத்தில் சாடியிருந்தவர்.

சட்டத்துக்கு முரணனாக விடுதலைப் புலிகளை தடைப்பட்டியலில் பிரித்தானிய உள்துறை அமைச்சு வைத்திருக்கின்றது என தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளித்துள்ள விவாகாரத்தில், சிங்கள தேசத்தின் நலன்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை தடுப்பதில் , சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தவறிவிட்டதென சிங்கள தேசத்து மக்கள் பெரும் கவலை கொண்டிருப்பதாகவும் சேனாளி வடுகே தனது பதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தீர்ப்பு தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சு, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமன்றி பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்திருந்ததோடு, புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுடன் தொடர்பானவர்கள் இதற்கான ஈடுபாட்டில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்தக்கருத்தானது "புலம்பெயர் தமிழர்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களை பயங்கரவாத மூலாம் பூசுகின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாக இருப்பதோடு, தனது இரத்தம் தோய்ந்த இனப்படுகொலை முகத்துக்கு வெள்ளை அடிக்கின்ற வழமையான அறிக்கையாகவே இது இருக்கின்றது" என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.