சுபீட்சத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.
ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும்.
கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.
வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது.
கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்திவருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.
நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி.
அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும்.மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.
எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய் நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
As we enter #2021 I wish everyone a year of strength, determination, hope & good health. I specially thank all front liners who stood steadfast in executing their duties during a very difficult year past. May 2021 bring with it renewed hope & an unbreakable spirit. #HappyNewYear pic.twitter.com/YNrEcpwJB3
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 31, 2020