நாளை மறுதினம் முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசி! வெளியானது அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு
193Shares

இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை (29) முதல் தொடங்கும் என்று கொரோனா தடுப்பூசி திட்டக் குழுவின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவின் மும்பாயில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பயன்படுத்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (என்.டி.ஆர்.ஏ) அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் தடுப்பூசி நாளை சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்படவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக இலங்கை ஜனாதிபதியிடம் நாளை ஒப்படைப்பார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை (29) முதல் தொடங்கும் என்று கொரோனா தடுப்பூசி திட்டக் குழுவின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும், கோவிட் ஒடுக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.