கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தனியான இலிங்கோற்பவர் மூர்த்தம்

Report Print Suthanthiran Suthanthiran in ஆன்மீகம்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் வடதிசையில் அமைந்துள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில், சிவபெருமானின் இலிங்கோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு நேற்று செந்தமிழ் அர்ச்சகர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது.

குழந்தைவேல் சித்தர் உள்ளிட்ட சித்தர்கள் வாழ்ந்து, அவர்களின் சமாதிகள் அமைந்துள்ள இடத்தில், தமிழர்களின் தொன்மங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், குழந்தைவேல் சுவாமிகள் சிவாலயம் மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஆகியோரால் மேற்படி லிங்கோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசைக்கு பிதிர்க்கடன் நிறைவேற்ற கீரிமலைக்கு வருகின்ற அடியவர்கள் தமது உறவினரை நினைத்து கடல் தீர்த்தத்தை குடத்தில் எடுத்து வந்து நேரடியாகவே லிங்கோற்பவருக்கு அபிஷேகம் செய்யும் வகையில், வட இந்தியாவின் காசியில் உள்ளதைப் போன்று இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பிதிர்க்கடன் செய்ய இன்று கீரிமலைக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவலிங்கப் பெருமானுக்கு கடல் தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

இதேவேளை, சித்தர்களின் சமாதிகள் அமைந்துள்ளதும் புதிதாக சிவலிங்க மூர்த்தம் அமைக்கப்பட்டதுமான இந்த இடத்திலேயே கடற்படையினர் கடந்த சில வாரங்களாக புதிய மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.

தமிழர்களின் தொன்மங்கள் நிறைந்த, புனித பிரதேசமான இந்த இடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதை உடனடியாக கைவிடுமாறு சைவ மகா சபை உள்ளிட்ட பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments