சைவ மக்களின் விரதங்களில் சிறந்தது கந்தஷ்டி! இன்று ஆரம்பம்!

Report Print Samy in ஆன்மீகம்

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது கந்தஷஷ்டி விரதம்.

இவ்விரதம் இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 25ம் திகதி புதன்கிழமையன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.

சைவ மக்கள் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் உணவு உண்டும் (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் அனுஷ்டிப்பர். ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின்னர் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தஷஷ்டி விரதம்.

முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த ஷஷ்டி (திதி) விரதம் என்பனவாம். அவ்விரதங்களில் மிகவும் சிறந்தது கந்தஷஷ்டி விரதமாகும்.

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படி பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்தபுராணம் விதிக்கின்றது.

கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் அழுக்குகளை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

குழந்தைப் பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதைத்தான் ஷஷ்டியில் இருந்தால் அகப்பையில்(கருப்பை) வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

இவ்விரதத்தின் போது, தினமும் கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம், கந்தஷஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் ஆகியவற்றைப் படித்தால் மன அமைதி நிலவும்.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் சைவ மக்கள் இருக்க வேண்டும்.

உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தஷஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்.

விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம்.

அதுவும் முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகலில் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால் பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில் சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறும் புராண நூல்கள் விதிக்கின்றன.

சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹா விஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தஷஷ்டியும் மிக விஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே.

ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்வது நலம் தரும்.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.