கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு!

Report Print Samy in ஆன்மீகம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் வருடாந்த பொங்கல் விழா நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து பூசை வழிபாடுகள் செய்து வந்துள்ள மரபு இந்துக்களிடம் இருந்து வந்துள்ளது என சரித்திர ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.

முதலில் இம்மக்கள் தரைப் பெண் என்ற பூமாதேவியை வணங்கி வந்தனர் என்றும் நிலமகளின் வழிபாட்டால் விவசாய விளைச்சலையும் உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகளையும் பெற்று வந்துள்ளனர் என்றும் இவ்வழிபாடே பிற்காலத்தில் சக்தி வழிபாடாக மாற்றம் கண்டுள்ள தென்றும் மேல்நாட்டு ஆய்வாளரான மொனீர் வில்லியம் ஒரு ஆய்வுநூலில் எழுதியுள்ளார்.

பத்தினி வழிபாட்டிற்கு மூலாதாரமாக இருக்கின்ற கண்ணகி பிறந்தது காவிரிப்பூம்பட்டினம். இது தஞ்சை மாவட்டத்தில் கடற்கரையைச் சார்ந்துள்ள தரங்கம்பாடியென்னும் சிற்றூரின் கிழக்கெல்லையாகும்.

மாசிலாமணி அம்மன் கோயிலில் இருந்து வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தை கடல் விழுங்கி விட்டது. இன்று முகத்துவாரத்தையும் மண்மேடுகளையுமே காண முடியும்.

கண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் ஸ்ரீரங்கத்தில் வழிபாடு நடத்தி மதுரைக்குச் சென்றனர்.

தமக்கு ஏற்பட்ட ஏழ்மை நிலை காரணமாக கண்ணகி தனது காற்சிலம்பில் ஒன்றை கழற்றி கோவலனிடம் கொடுத்து இதை விற்று வருமாறு கேட்டுள்ளார்.

இதற்கமைய சிலம்பு விற்கப் போன இடத்தில் கோவலன் கள்வன் என பட்டம் சூட்டப்பட்டு மன்னனால் கொலை செய்யப்பட்டான்.

இதனையறிந்த கண்ணகி தனது மற்றைய சிலம்பொன்றைக் கையிலேந்தி தென்னவன் கொற்றவையில் நீதி கேட்டாள். உண்மை நிலை கண்டறிப்பட்டது.

மாண்டவர் மீண்டும் வரப் போவதில்லை, மன்னன் நீதி தவறி விட்டான் என்பதால் கடும் கோபம் கொண்ட கண்ணகி தென்னவன் கொற்றத்தையும் மதுரை மாநகரையும் அழித்தாள்.

இதன் பின் கண்ணகி வைகையாற்றின் தென்கரை வழியாகக் மேற்றிசை நோக்கிச் சென்றாள். நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து சேரநாட்டு எல்லையுள் ஒரு வேங்கைமர நிழலில் நின்றாள்.

சுருளிமலை உச்சியிலிருந்து வரும் நீர்வீழ்ச்சியை பார்த்து ஆகாரமின்றி பதினாறு நாள் நின்றாள். கண்ணகி தவம் செய்த இடம் மதுரைக்கு தென்மேற்காக உள்ளது.

முதன் முதலில் கண்ணகி அம்மனுக்கும் கோவலனுக்கும் கொளும்பாரூரில் செங்குட்டுவன் ஆலயம் அமைத்தான். மேலும் திருச்செங்கோட்டையில் பத்தினி கோட்டம் அமைத்து ஆலய பிரதிஷ்டை செய்தான்.

பெருவிழாவுக்கு இலங்கையை ஆண்டுவந்த கஜபாகு வேந்தனும் (கி.பி 123_- 135) பாண்டிய வேந்தன் வெற்றிவேற் செழியனும், சேரநாட்டு அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசகுமாரன் இளங்கோவடிகளும் மகத்தேச மன்னரும், வட இந்திய அரசர் கனகவியசரும் சமுகம் கொடுத்திருந்தனர்.

கண்ணகி கோட்டத்தில் ஆலய பிரதிஷ்டையில் ஆகாயத்தில் பெரும் சோதி தெரிந்தது. செங்குட்டுவனும் அவனைச் சூழ்ந்தோரும் வியந்தனர்.

செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்தியபூசை செய்யும்படி சொன்னான். கோவிலை மும்முறை வலம்வந்து நின்றவேளை அங்கு வந்த கஜபாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி, எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையிலும் நீ எழுந்தருளி அருள் புரியவேண்டுமென பிரார்த்தித்தான்.

அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தோமென்று ஓர் அசரீரி ஒலி கேட்டது.கஜபாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தன மரப்பலகையில் செய்த மேசையில் வைத்து கஜபாகு மன்னனுக்கு செங்குட்டுவன் கொடுத்தான்.

பாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானை மூலம் சந்தன மரத்தினால் செய்த பேழையையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான்.

வேதாரணியத்திலிருந்து கப்பல் மூலம் காரைநகருக்கும் கீரிமலைக்குமிடையிலுள்ள திருவடி நிலையம் என்ற இடத்தில் இறங்கினான் மன்னன்.

கயபாகு மன்னனின் யானைப்படைகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அங்கு நின்றன, திருவடி நிலையத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாக அங்களுமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடாத்தப்பட்டு வேலம்பாறைக்கு வைகாசிப் பூரணை தினத்தன்று வந்து சேர்ந்தது.

இதன் பின் கரம்பகம், கோவிற்குளம், நாகர்கோவில், வன்னிப்புட்டுக்குளம், விளாங்குளம், முள்ளியவளை, வற்றாப்பளை, சாம்பல்தீவு, திருகோணமலை, தம்பலகாமம், பாலம்போட்டாறு, நீலாப்பனை வரையும் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டிகள் மூலம் கோராவெளி, கொக்கட்டிமுனை, தாண்டவன்வெளி, வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மகிழந்தீவு, மண்முனை புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம், எருவில், மகிழூர், கல்லாறு, கல்முனை,காரைதீவு, பட்டிமேடு (பனங்காடு), தம்பிலுவில், பாணமை, கதிர்காமம் மற்றும் கண்டி வரை கொண்டு செல்லப்பட்டது.

கண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கதிர்காமத்தில் பிரதான முருகன் ஆலயத்திற்கு முன்புறமாக (வலது புறம்) உள்ள பத்தினி அம்மன் ஆலயமும் கஜபாகு மன்னன் காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளது.

இவை தவிர சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு முதன்மைபெற மன்னனே பிரதான காரணமாவான்.

இலங்கை அம்மன் ஆலயங்களுக்கென தனித்தனியான காவியங்கள் பாடப்பட்டுள்ளதுடன் பக்தி முறையிலான பூசை வழிபாடுகள் நடாத்தப்படுவது மரபாக உள்ளது.

வன்னி பெரு நிலப்பரப்பில் உள்ள அம்மன் ஆலயங்களில் படிக்கப்படுகின்ற ஏட்டின் பெயர் 'சிலம்பு கூறல்' ஆகும். இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட செகராசசேகரன் காலத்தில் வாழ்ந்த காங்கேயப் புலவர் பாடியதாக இருப்பினும் ஏட்டுச் சுவடு சிதைவு, பல திரிபடைவுகள் காரணமாகவும் யாழ். பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த குடாரப்பு கிராம வெற்றிவேற் புலவரால் வடிவமைக்கப்பட்டு பாடப்பட்டு வருகின்றது.

இதேபோன்று கிழக்கிலங்கையின் வழக்கிலுள்ள குளுத்திப் பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள், வசந்தன் உடுக்குச் சிந்து, பொற்புறாக்காவியம் மழைக்காவியம் போன்றவை சகவீரப் புலவரால் இயற்றப்பட்டதாக அறியமுடிகின்ற போதிலும் உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை எனலாம்.

எனவே இலங்கையில் கண்ணகி அம்மன் அல்லது பத்தினி தெய்வம் இனங்கடந்த மொழி கடந்த பிரதேசங் கடந்த தெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றாள்.