தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் நூதன வழிபாடு!

Report Print Samy in ஆன்மீகம்

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக பெயர்த்தெடுத்த பழைய கற்களைக் கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச் சென்ற மிகப் பெரிய சொத்து 'தஞ்சை பெரிய கோவில்' ஆகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக இந்தக் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்தக் கோயிலுக்கு எதிர்வரும் வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக பல இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

இதற்காக கோயிலின் சுற்றுப் பிரகார தரைகளில் புதிய கற்களைப் பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில தினங்களாக நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரகாரத்தின் தரையில் இருந்து பெயர்த்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இந்த நூதன வழிபாட்டை செய்யத் தொடங்கியுள்ளனர்.

வீடு கட்டுவது உள்ளிட்ட தங்களின் வெவ்வேறு பிரார்த்தனைகளை கோரிக்கைகளாக முன்வைத்து பக்தர்கள் இந்த வழிபாட்டில் இறங்கியுள்ளனர்.

இராஜராஜன் கட்டிய இந்தக் கோயிலின் கற்களைக் கொண்டு வழிபாடு செய்தால் தாங்களும் சொந்தமாக வீடு கட்டுவோம் என்ற நம்பிக்கையில் இதனைச் செய்வதாக பக்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.