பாம்புக்கும் எனக்கும் முக்கிய தொடர்புண்டு! முதலமைச்சர் விக்கி

Report Print Samy in ஆன்மீகம்

என்னுடைய வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது அந்த நிகழ்வுக்கு முன் ஏதாவது ஒரு பாம்பு என் வீட்டிற்கு வந்து போகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாகங்களைத் தரிசிப்பதையும், நாகதம்பிரான் கோயில்களுக்கு செல்வதையும் இறைவன் சித்தமாகவே நான் கருதி வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் அன்னதான மடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது

என்னுடைய இரு இளமானிப் பட்டங்கள் பெற்ற போதும் சட்டக் கல்லூரியில் பரீட்சைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பரீட்சைகளுக்குச் சில நாள்களுக்கு முன்னர் ஏதாவது ஒரு பாம்பு என்னைத் தேடி வரும்.

அதனால் கடைசிக் கட்டங்களில் பரீட்சைக்கு முன் பாம்பைத் தேடிக் கொண்டிருப்பேன். அவை வந்தால் பரீட்சையில் சித்தி அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை.

ஒரு முறை பாம்பு வரவில்லை. மனவருத்தத்தில் இருந்த போது என் தந்தையார் காலமாகி விட்டார். நான் அம் மாதம் சட்டக் கல்லூரிப் பரீட்சைக்குத் தோற்றவில்லை.

நான் பதுளையில் மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஒரு வெள்ளை நாகம் வீடுதேடி வந்தது. உடனே என் தங்கையார் நான் இடம்மாறப் போகின்றேன் என்றார். இரண்டு வாரங்களில் எனக்குக் கொழும்புக்கு மாற்றம் கிடைத்தது.

எனவே என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நாகங்களைத் தரிசிப்பதை, நாகதம்பிரான் கோயில்களுக்கு செல்வதை இறைவன் சித்தமாகவே நான் கருதி வருகின்றேன் என்றார்