நவராத்திரி கும்பம் வைத்தல்

Report Print Akkash in ஆன்மீகம்

நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றாகும்.

மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதி தேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விரதம் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். இது தட்சணாயண காலமாகும்.

இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.

நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே, புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் உருவம் கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்க வேண்டும்.

பூசை முறைகளில் ஒன்று தான் கும்பம் வைத்தல்.

நறுமணமுள்ள சந்தனம், பூ , இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும்.

புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்ய வேண்டும்.