யாழில் இருந்து தெற்கிற்கு 10 பாரஊர்திகளில் உதவிப் பொருட்கள் அனுப்பிவைப்பு

Report Print Thayalan Thayalan in இலங்கை

சிறிலங்காவின் தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் கடந்தமாத இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, வடக்கில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள், நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்டச் செயலகத்தின் ஊடாகவும், சிறிலங்கா காவல்துறையினர் மூலமாகவும், மேலும் பல்வேறு தரப்பினராலும் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் நேற்று 10 பாரஊர்திகளில் தெற்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வட மாகாண ஆளுனர் மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் ஆகியோர் இணைந்து, இந்த பாரஊர்திகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, வடக்கின் ஏனைய மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று பாரஊர்திகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, புலத்சிங்கள பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்காக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 5 இலட்சம் ரூபா பெறுமதியான எழுதுகருவிகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.