இலங்கை நாடாளுமன்றில் அமளி

Report Print Dias Dias in இலங்கை

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது கடும் வாதப் பிரதிவாதங்களை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுடனான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று காலை முன்வைக்கப்பட்ட நிலையில், அது மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டதா? என ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

அதற்கான அவசியம் கிடையாதென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டதோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை உள்ளூராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆரம்பித்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சபை அமர்வுகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, இத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும், அதுவரை குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானதென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், திருத்தங்களுடனான சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.