இன்று வித்தியாவின் பிறந்தநாள்

Report Print Dias Dias in இலங்கை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை வழக்கின் தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்றில் வைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு கடந்த மாதம் 27ம் திகதி அறிவித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வித்தியா துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பல கனவுகளுடன் வாழ்ந்து வந்த, படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் பிறந்தநாள் இன்றாகும்.

மாங்குளம் அரச மருத்துவமனையில் 1996 நவம்பர் 25 இல் வித்தியா பிறந்தார்.

ஈழப் போர்க் காலத்தில் 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து மல்லாவி வன்னிப் பகுதியில் மாங்குளம் அருகேயுள்ள மல்லாவி என்ற ஊரில் குடியேறினர் புங்குடுதீவைச் சேர்ந்த வித்தியாவின் குடும்பம்.

ஆறாம் வகுப்பு வரை நள்ளாறு வித்தியாலயத்தில் கல்வி பயின்றதோடு, ஈழப்போரின் இறுதிக் காலப் பகுதியில் கொழும்பு நகரில் கல்வி பயின்றார் வித்தியா .

வித்தியாவின் குடும்பம் வன்னியில் தங்கியிருந்து போர் முடிவடைந்தவுடன் இலங்கை அரசின் 'மெனிக் பாம்' எனப்பட்ட தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

2010 இல் வித்தியாவும் அவரது குடும்பமும் தமது சொந்த ஊரான புங்குடுதீவுக்குத் திரும்பினர். வித்தியா புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்நிலையிலேயே கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி அன்று, மாணவி வித்தியா தனது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச்சம்பவம் புங்குடுதீவு பகுதியையே உலுக்கியிருந்ததுடன், யாழ் குடாநாடு மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.