கரையோரப்பகுதிகளில் 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாய நிலையிருப்பதனால் அப்பகுதி மக்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரி வித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற விசேட ஊட கவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரி வித்தார்.
அரச அதிபர் மேலும் கூறுகையில்,
திருகோணமலையின் வடகிழக்கு பகுதியில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதன் காரணமாக கரையோரப்பகுதிகளில் சுமார் 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் நிலையிருப்பதாக வானிலை அவதான நிலையத்தினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைய பிரதேச செயலகங்கள் ஊடாகவும் கிராமங்களில் உள்ள அனர்த்தகுழுக்கள் ஊடாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அத்துடன் அனர்த்தங்கள் ஏற்படும்போது செயற்படும் வகையில் அனைத்து பிரிவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.குறிப்பாக ஆபத்துகள் ஏற்படும்போது அங்குள்ளவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
சுனாமி, சூறாவளி ஏற்படும் என்ற வதந்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறான எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை.
வதந்திகளை நம்ப வேண்டாம். அதிகாரிகள் மூலம் சரியான தகவல்கள் வழங்கப்படும். கடும் காற்று நிலவும் நிலையுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத் திற்கு மேலதிகமாக அனர்த்தமுகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,இதனுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்கள் இணைந்தவகையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.அதன் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
அந்த செயலணிக்கு அலுவலகம் அமைத்து அதற்கு ஐந்து உத்தியோகத்தர்களை நியமித்து அவர்களின் தொலைபேசி எண்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்த செயலணியானது தொடர்ச்சியாக மாவட்ட செயலகத்தில் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.அனர்த்தங்கள் ஏற்படும்போது செயற்படுத்தும் வகையில் இந்த செயலணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதேச மட்டத்திலும் ஒரு அலுவலகம் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரும், ஏற்பட்ட பின்னரும், அனர்த்தம் ஏற்படும்போதும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
அந்தவேளையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 கரையோர பிரதேசங்கள் அனர்த்தங்களின்போது பாதிப்பிற் குள்ளாகும் நிலையிலிருக்கின்றன. உயர் ஆபத்தான பகுதி என்றும் ஆபத்தான பகுதி என்றும் இரண் டாக பிரித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுவருகின்றன.
மீனவர்கள் இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் தொடர்பான தக வல்களைப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுவருகின்றன என்றும் கூறினார்.